ஜனநாயக இந்தியாவில் பேசவிடாமல் அடக்குமுறை தொடர்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், நேற்று காலை வேளாண் தொடர்பான இரு மசோதாக்களைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மசோதாக்கள் மீதான காரசார விவாதம் நடைபெற்றது.
இதனிடையே, அவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவை துணைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். மேலும், அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களைக் கிழித்து எறிந்ததால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவை மீண்டும் கூடிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அவையில் அமளியில் ஈடுபட்ட எட்டு எம்.பி க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டெரெக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜீவ் சத்சவ், கே.கே.ரகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஜீர் உசேன் மற்றும் இளமாறன் கரீம் ஆகியோர் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகத் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
இந்நிலையில் எம்.பி க்களின் இடைநீக்கம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "ஜனநாயக இந்தியாவில் பேசவிடாமல் அடக்குமுறை தொடர்கிறது. முதலில் பேசவிடாமல் தடுத்தார்கள், அடுத்து நாடாளுமன்றத்திலிருந்து எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். கறுப்பு வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலைகளை அறியாமல் அரசு கண்களைக் மூடிக்கொண்டது. அனைத்தும் அறிந்ததாக கூறிக்கொள்ளும் இந்த அரசின் முடிவற்ற அகங்காரம்தான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்குப் பேரழிவைக் கொண்டுவந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.