தலைநகர் டெல்லி, பாலாம் பகுதியைச் சேர்ந்தவர் வினய் குமார். இவர் கடந்த 10ஆம் தேதி தனது கார் திருடுபோய்விட்டதாக போலீசில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருடு போன காரை தேடி வந்தனர்.
இதற்கிடையில், ராஜஸ்தான் மாநிலம், பிகானர் பகுதியில் ஸ்கார்பியோ கார் ஒன்று சாலையோரத்தில் வெகு நாட்களாக நின்று கொண்டிருந்தது. இதனை கண்ட அந்த வழி சென்றவர்கள், நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனை செய்தனர். அப்போது, அந்த காரின் கண்ணாடியில் மூன்று காகிதங்கள் ஒட்டியிருந்தது. காரின் பின்பக்க கண்ணாடியில், ஒட்டப்பட்டிருந்த முதல் காகித குறிப்பில், ‘இந்த கார் டெல்லி பாலாம் பகுதியில் இருந்து திருடப்பட்டுள்ளது. மன்னிக்கவும், DL 9 CA Z2937 என்று எழுதப்பட்டிருந்தது. இரண்டாவது காகித குறிப்பில், ‘ஐ லவ் இந்தியா (I Love India)’ என்று எழுதப்பட்டிருந்தது.
மூன்றாவது காகித குறிப்பில், ‘இந்த கார் டெல்லியில் இருந்து திருடப்பட்டுள்ளது. தயவு செய்து காவல்துறைக்கு போன் செய்து தகவல் தெரிவிக்கவும். அவசரம்’ என்று எழுதப்பட்டிருந்தது. உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், காரை மீட்டு திருடிய நபரை பிடிக்க தீவிரமாக விசாராணை நடத்தி வருகின்றனர்.