மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில், ‘இந்திய நிதிச்சந்தையின் பார்வை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, முதலீட்டாளர்களுடன் உரையாற்றினார்.
இதனையடுத்து, இதில் கலந்துக்கொண்ட முதலீட்டாளர்கள் மற்றும் புரோக்கர்கள் உட்பட அனைவரும் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பி பதில் பெற்று வந்தனர். அதில் முதலீட்டாளர் ஒருவர் நிர்மலா சீதாராமனிடம், ‘ஜி.எஸ்.டி, ஜி.ஜி.எஸ்.டி, முத்திரை வரி, பத்திர பரிவர்த்தனை வரி (எஸ்.டி.டி)) ஆகிய வரிகளின் மூலம் இந்திய அரசு எங்களை விட அதிகமான லாபத்தை பெறுகிறது. நான் எல்லாவற்றிலும் முதலீடு செய்கிறேன். நான் நிறைய ரிஸ்க் எடுத்து வருகிறேன். என்னுடைய முழு லாபத்தையும் இந்திய அரசாங்கம் எடுத்துக்கொள்கிறது.
இந்திய அரசு எனது ‘ஸ்லீப்பிங் பார்ட்னர்’ போல மாறி, நான் வருமானம் இல்லாமல் பணிபுரியும் கூட்டாளியாக இருந்து வருகிறேன். இந்த வரிப் பதுக்கல்களுடன் ஒரு புரோக்கர் எவ்வாறு செயல்பட முடியும்? வீடு வாங்குவதில் இருந்த பணக் கூறுகளை அரசு நீக்கியுள்ளது. இப்போதைய காலத்தில் மும்பை போன்ற இடத்தில் வீடு வாங்குவதென்பது கனவாகவே இருக்கிறது. ஏனென்றால், நான் வரி கட்டுவதால், என்னிடம் வெள்ளைப் பணம் இருக்கிறது. இப்போது எல்லாவற்றையும் காசோலையாகக் கொடுக்க வேண்டும். எனவே இந்திய அரசாங்கத்திற்கு வரி செலுத்திய பிறகு மிச்சமாகதான் எனது வங்கி இருப்பில் இருக்கிறது. இப்போது மீண்டும் நான் வீடு வாங்கப் போகும் போது முத்திரை வரி, ஜிஎஸ்டி, 11 சதவீதம் செலுத்த வேண்டும். குறைந்த வளங்களைக் கொண்ட ஒரு நபருக்கு, வீடு வாங்க அரசு எப்படி உதவுகிறது?”எனக் கேள்விகளை முன்வைத்து பேசினார்.
அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இதற்கு என்னிடம் பதில் இல்லை. ‘ஸ்லீப்பிங் பார்ட்னரால்’ இங்கே உட்கார்ந்து பதில் சொல்ல முடியாது” என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார். நிர்மலா சீதாராமனின் இந்தப் பதில் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.