Skip to main content

'சர்வ நாசமாய் போகட்டும்'- திருப்பதியில் சூடம் ஏற்றி சத்தியம் செய்த நபரால் பரபரப்பு

Published on 23/09/2024 | Edited on 23/09/2024
stir in Tirupati due to the man who took an oath

லட்டில் மாடு மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக ஆந்திர அரசு, முன்னாள் ஆளுங்கட்சி மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் தயாரித்த நான்கு லட்டு நெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் அடிப்படையில், லட்டுக்களை தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்திருந்தார்.

திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், பக்தர்களுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அந்த வேண்டுகோளில், இன்று மாலை 6 மணிக்கு பக்தர்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள தேவஸ்தானம், ஸ்ரீ வெங்கடேசா... நாராயணா...' என்று மந்திரங்களை உச்சரிக்கவும் பக்தர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதனால் விலங்கு கொழுப்பால் தயாரித்த லாட்டல் ஏற்பட்ட தோஷம் விலகும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தேவஸ்தானம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இதேபோன்ற அறிவிப்பு பல்வேறு விமர்சனங்களுக்கு  இட்டுச் சென்ற நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த பரிகார அறிவிப்பும் பேசுபொருளாகியுள்ளது.

stir in Tirupati due to the man who took an oath

இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு வந்த முன்னாள் அறங்காவலர் நிர்வாகி ஒருவர் கோவிலில் சூடம் ஏற்றி சத்தியம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் கருணாகரன் ரெட்டி கோவில் குளத்தில் நீராடியதோடு கோவில் நுழைவு வாயில் பகுதிக்கு வந்துள்ளார். தொடர்ந்து நுழைவு வாயில் பகுதியில் சூடம் ஏற்றிய கருணாகர ரெட்டி, 'லட்டுவில் நான் கலப்படம் செய்திருந்தால் சர்வ நாசமாய் வேண்டும்' எனக்கூறி சூடத்தை அணைத்து சத்தியம் செய்தார். உடனடியாக அங்கு இருந்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி காரில் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சற்று சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

ராஜசேகர் ரெட்டி ஆட்சி காலத்திலும், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்திலும் திருப்பதி அறங்காவலர் குழுத்தலைவராக இரண்டு முறை பதவி வகித்தவர் கருணாகர ரெட்டி என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

சார்ந்த செய்திகள்