இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் முன்னிலை நிலவரத்தை வைத்து வெற்றி நிலவரத்தை கணிக்க முடிகிறது. இந்தியாவின் டாப் 5 முக்கிய வேட்பாளர்களாகக் கருதப்படும் ஐந்து பேரின் நிலை எப்படி இருக்கிறது?
2014 தேர்தலில் வென்று பிரதமராக இருந்து தற்போது மீண்டும் பிரதமராகும் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கிறார் நரேந்திர மோடி. தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் தனக்கு அடுத்து இருக்கும் வேட்பாளரை விட 3,50,000 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றியை நெருங்கியுள்ளார்.
சோனியாகாந்தி, உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிமுகத்தில் இருக்கிறார். எதிரில் இருக்கும் பாஜக வேட்பாளரை முந்திச் சென்றுவிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்று பின்னர் நாடாளுமன்றத்தில் அதிரடி பேச்சால் கலக்கிய ராகுல் காந்தி இந்தத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதற்கு முன்பு மூன்று முறை வென்ற அமேதி தொகுதியில் இம்முறை தோல்வி திசையில் இருக்கும் அவர், கேரளாவில் போட்டியிட்ட வயநாடு தொகுதியில் வெற்றியை மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் உறுதி செய்திருக்கிறார்.
பாஜகவின் சாணக்யராகத் திகழும் அமித் ஷா குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டார். தற்போது அங்கே இரண்டாவது இடத்தில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளரை விட 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நோக்கிச் செல்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளாகவும் அடுத்த 5 ஆண்டுகளும் இந்தியாவின் ஆட்சியை பின்னிருந்து நடத்தவிருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையகம் நாக்பூர். மோடிக்கு பதிலான தேர்வாக சொல்லப்பட்டவர் நிதின் கட்கரி. நாக்பூரில் போட்டியிட்ட நிதின் கட்கரி காங்கிரஸ் வேட்பாளரை விட 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியை நோக்கிச் செல்கிறார்.