கரோனா பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் "கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்கள் இடையே பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவை மார்ச் 31- ஆம் தேதி வரை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் கரோனா பாதிப்புள்ள ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 75 மாவட்டங்களில் ரயில், பேருந்து போன்ற போக்குவரத்துக்கு மார்ச் 31- ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும்." இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் ஏற்கனவே ரத்து செய்துவிட்டதாக இந்திய ரயில்வே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.