மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், ‘பழங்குடியின குக்கி-ஜோ சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், ஆகஸ்ட் 29ஆம் தேதி இம்பாலில் நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவர்கள் கலந்துகொள்வதற்கு தகுந்த பாதுகாப்பை வழங்குவதாகவும்’ வியாழக்கிழமை தெரிவித்தார். இந்நிலையில், குக்கி-ஜோ சமூகத்தைச் சேர்ந்த மணிப்பூர் எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும், தங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறிய முதல்வர் பிரேன் சிங்கின் கூற்றை வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
மே 3 ஆம் தேதி வகுப்புவாத வன்முறை வெடித்ததில் இருந்து, சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் எந்தவித தொடர்பிலும் இல்லை அல்லது அவர் அதனை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
“அவர் [பிரேன்] தொடர்பு கொண்டதாக சொல்லப்படுவது ஒரு சூழ்ச்சியாகவும் குக்கி-ஜோ-ஹ்மர் எம்.எல்.ஏக்கள் மற்றும் மக்களுக்கு இடையே அவநம்பிக்கையை, ஒற்றுமையின்மையை விதைப்பதற்கானதாகவும் இருக்கலாம்” என்று அவர்கள் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள், மே 4 அன்று குக்கி-ஜோ எம்.எல்.ஏ.க்கள் இம்பாலில் உள்ள முதல்வரின் இல்லத்தில் முதல்வரை சந்தித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது உடனிருந்த எம்.எல்.ஏ வுங்ஜாகின் வால்டே மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பின்னர், படுகாயமடைந்த வால்டே, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் இன்றுவரை எந்தவொரு விசாரணையும், கைதும் செய்யப்படவில்லை என்றும், குக்கி-ஜோ மக்களுக்கு இம்பால் மரணப் பள்ளத்தாக்கு ஆகிவிட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதேபோல், துணை ராணுவ வீரர்கள் கூட, மீரா பைபிஸ் (மெய்தி பெண் ஜோதிகள்) என்று அழைக்கப்படுபவர்களால் சோதனை படுத்தப்படுகிறார்கள். எங்கள் அலுவலகங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகள் கொள்ளையடிக்கப்படுகின்றன; தாக்கப்படுகின்றன இல்லையேல் எரிக்கப்படுகின்றன என்று எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து, நிரந்தர அமைதி மற்றும் தீர்வை மீட்டெடுப்பதற்காக இந்திய அரசியலமைப்பின் படி தனி நிர்வாகத்தை உருவாக்குவதற்கு சட்டப்பூர்வமான கோரிக்கையை மீண்டும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், குக்கி-ஜோ சமூகத்தைச் சேர்ந்த பாஜகவின் அமைச்சர் நெம்சா கிப்ஜென், சபாநாயகர் தோக்சோம் சத்யபிரதா சிங்குக்கு, ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள இயலாது என்றும், விடுப்புக் கோரியும் கடிதம் எழுதியுள்ளார்.
“மணிப்பூரில் மே 3 அன்று கலவரம் வெடித்ததில் இருந்து, நிலவிவரும் பாதுகாப்பின் அடிப்படையில் நானும் எனது குடும்பமும் இம்பாலில் தங்குவது சாத்தியமில்லை. தற்போதைய வன்முறை நெருக்கடிகள் மற்றும் இம்பாலில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மனதில் கொண்டு, நடக்கவிருக்கும் ஒரு நாள் அமர்வில் என்னால் கலந்து கொள்ள முடியாது...." என்று கிப்ஜென் சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்.
மற்ற குக்கி-ஜோ சட்டமன்ற உறுப்பினர்களும் அமர்வில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, ஆகஸ்ட் 16 அன்று, 10 எம்.எல்.ஏ.க்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தனர். அதில், குக்கி மற்றும் பிற பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலை மாவட்டங்களுக்கு தனி தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் வேண்டும் என்று கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி மணிப்பூருக்கு இந்த நிமிடம் வரை நேரில் சென்று பார்வையிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.