நாடாளுமன்றக் கட்டடம் சுமார் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இடவசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டடமானது, 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடி கொண்ட முக்கோண வடிவிலான கட்டிடமாக சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் மக்களவையில் சுமார் 888 பேர் வரையிலும், மாநிலங்களவையில் சுமார் 300 உறுப்பினர்கள் வரையிலும் அமரும் வகையில் கட்டப்பட்டு உள்ளன. நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் கலந்து கொள்ளும் வகையில் நடைபெறும் கூட்டு கூட்டத்தின் போது மக்களவையில் 1280 உறுப்பினர்கள் வரை ஒரே நேரத்தில் அமரும் வகையில் கட்டப்பட்டு உள்ள நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கடந்த மே 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து இன்று முதல் (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் படி இன்று காலை புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெற உள்ளது.