Skip to main content

தமிழர்களை மீட்க சிறப்பு விமானம்? - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். செய்தியாளர் சந்திப்பு

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

Special flight to rescue Tamils?; Minister K.K.S.S.R. Press conference

 

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்டுள்ள விபத்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது. தற்போதைய நிலவரப்படி 280 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்நிலையில் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரு அமைச்சர்களையும் உயரதிகாரிகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சம்பவம் நடந்த இடத்திற்கு போகச் சொல்லியுள்ளார். அங்கேயே இருந்து பணிகளை நிறைவேற்றிவிட்டுத்தான் திரும்ப வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இன்னும் இரு பெட்டிகளை கணக்கெடுக்க முடியவில்லை என சொல்லியுள்ளார்கள். அவை அனைத்தையும் கணக்கெடுத்த பிறகு தான் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளிவரும். அதன் பின்பே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாராவது உயிரிழந்துள்ளார்களா? அவ்வாறு இருப்பின் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என தெரிய வரும்.

 

நம் அதிகாரிகள் சென்றுள்ளார்கள். தமிழ்நாட்டில் பணிபுரியும் அதிகாரிகளில் அம்மாநில மொழி பேசும் அதிகாரிகளையும் அனுப்பி வைத்துள்ளோம். மேலும் மீட்புப்படை வீரர்கள் அனுப்பலாமா எனக் கேட்டதற்கு எங்களிடமே ஆட்கள் தயாராக உள்ளனர் என ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது. எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்ற விபரம் தெரிய வராததன் காரணம்,  மூன்று வண்டிகள் பெரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. வண்டிகளை உடைத்து காயம் பட்டவர்களை மீட்க வேண்டும். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க வேண்டும். அதனால் சிறிது காலதாமதம் ஆகலாம். அரசு கொடுக்கும் தரவுகள் சரியாக இருக்க வேண்டும் என்பதால் இருமுறை உறுதி செய்த பின் அளிக்கப்படலாம். சிறப்பு விமானங்களுக்கு ஏற்பாடு செய்து காயமடைந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதையும் செய்வார்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்