Skip to main content

கூண்டோடு ராஜினாமா... சோனியா காந்தியின் அதிரடி உத்தரவு!

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

Sonia

 

அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிப் படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க.வெற்றிபெற்றது.

 

போட்டியிட்ட மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் தோல்வி முகம் கண்ட நிலையில் எம்.பி.ராகுல்காந்தி தேர்தல் முடிவுகள் குறித்து கடந்த 10 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ''மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்தல் முடிவுகளில் இருந்து பாடம் கற்பதுடன் இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்புக்கும், அர்பணிப்புக்கும் நன்றி'' என தெரிவித்திருந்தார்.

 

அதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 13 ஆம் தேதி  கூடியது. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணம், நடப்பு அரசியல் சூழல், வரவிருக்கும் மற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல், வரவிருக்கிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி விரும்பினால் இணைந்து போட்டியிட தயார் என்று கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கருத்து உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

 

இந்நிலையில் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ள உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களை கூண்டோடு ராஜினாமா செய்ய சோனியா காந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்