மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 430 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (25-05-24) ஆறாம் கட்டமாக 57 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது. மேலும், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கடைசி கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மொத்தம் 7 மக்களவைத் தொகுதிகள் கொண்ட டெல்லியில் நாளை (25-05-24) நடைபெறவுள்ளது. இதில் இந்தியக் கூட்டணி சார்பில் 3 தொகுதிகளில் காங்கிரஸும், 4 தொகுதிகளில் ஆம் ஆத்மியும் போட்டியிடுகிறது. இதற்கிடையே, டெல்லி வாக்காளர்களிடம் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், ‘இது மிகவும் முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தல் நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றும். இந்தத் தேர்தல் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், அரசியலமைப்பு நிறுவனங்கள் மீதான தாக்குதல் போன்ற பிரச்சனைகளை முன்வைத்து போராடுகிறது. இந்தப் போராட்டத்தில் உங்கள் பங்கை நீங்கள் வகிக்க வேண்டும். உங்களின் ஒவ்வொரு வாக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும், பணவீக்கத்தைக் குறைக்கும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும். மேலும், ஒரு பொன்னான எதிர்காலத்தில் சமமான இந்தியாவை உருவாக்கும். டெல்லியின் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.