மும்பையில் கடந்த 02/10/2021 அன்று கோவா செல்லக்கூடிய சொகுசுக் கப்பல் ஒன்றில் பார்ட்டி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பார்ட்டியில் பங்கேற்றவர்களைக் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், நேற்று முன்தினம் (03/10/2021) காலை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன்கானை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்ற அதிகாரிகள் 20 மணிநேர விசாரணைக்குப் பின் ஆர்யன்கானை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரும் மும்பை விசாரணை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அக்.7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டு உரியவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் ஆரியன்கானிடம் நடத்திய விசாரணையில், கடந்த நான்கு வருடங்களாகப் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருவதாக அவர் ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கப்பலிலிருந்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் போதை மருந்து விற்றதாகக் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் நாயர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரியன்கான் ஸ்ரேயாஸ் நாயர் மற்றும் அவருடன் கைதான மற்றொரு நபர் என மூவரும் அடிக்கடி பார்ட்டி கொண்டாடியிருப்பது அவர்களின் செல்ஃபோன் வாட்ஸ் அப் உரையாடலில் தெரியவந்துள்ளது எனப் போதை ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விசாரணையில், நான்கு வருடங்களாகப் போதை மருந்து பயன்படுத்தி வருவதாக ஆர்யன்கான் ஒப்புக்கொண்டதாகவும், விசாரணையின் போது பலமுறை அழுததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் தற்போது ஸ்பெயினில் உள்ள அவரது தந்தை நடிகர் ஷாருக்கானுடன் இரண்டு நிமிடம் பேச அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஷாருக்கானின் பழைய நேர்காணல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் ஷாருக்கான், தன் மகன் அவன் விருப்பத்திற்கு இருக்கலாம். பெண்கள் பின்னால் போகலாம். புகை பிடித்துக் கொள்ளலாம் ஏன்...? போதை மருந்துகளைக் கூட பயன்படுத்தலாம் எனத் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ஷாருக்கானின் வீடியோவில் உள்ளபடி தந்தையின் ஆசையை அவரது மகன் நிறைவேற்றிவிட்டார் என விமர்சனமும் எழுந்துவருகிறது.