நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிப் படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி வாகையைச் சூடியது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணம், நடப்பு அரசியல் சூழல், வரவிருக்கும் மற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல், வரவிருக்கிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி விரும்பினால் இணைந்து போட்டியிட தயார் என்று கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கருத்து உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கூட்டத்துக்கு பிறகு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடருவார் என்று தெரிவித்தனர்.