தலைநகர் டெல்லியின் நேப் சராய் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன். இவரது பெற்றோர் ராஜேஷ் குமார்(51), கோமல்(46) மற்றும் சகோதரி கவிதா ஆகிய மூன்று பேரும் நேற்று அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். சம்பவம் நடந்த போது நடைபயிற்சிக்காக தான் வெளியே சென்றிருந்ததாக அர்ஜுன் போலீசாரிடம், இச்சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
அவர் அளித்த அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது. அதில் வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்ததற்கான எந்தவித தடயமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதில் சந்தேகமடைந்த போலீசார், அர்ஜுனிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், பெற்றோர் மற்றும் சகோதரியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அர்ஜுனுடைய தந்தை, அவரை அடிக்கடி திட்டி வந்ததாலும், சகோதரியுடன் ஏற்பட்ட மோதல் போக்கினாலும், அவர்களைக் கொலை செய்ய அர்ஜுன் திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, பெற்றோரின் திருமண நாள் அன்று, தாய் தந்தை மற்றும் சகோதரியை கத்தியை வைத்து சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, அர்ஜுனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். பெற்றோர் மற்றும் சகோதரியைக் கொலை செய்துவிட்டு போலீசில் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.