கர்நாடகா மாநிலம், சன்னகிரி தாலுகா, சந்தேபென்னூர் பகுதியில் உள்ள சாலையோர பெட்ரோல் பங்க் அருகே ஆண் சடலம் ஒன்று கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது. இதனைக் கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இது குறித்து உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த எஸ்.பி உமா பிரசாந்த், பிற காவல்துறையினருடன், ‘துங்கா 2’ என்ற மோப்ப நாய் மற்றும் அதை கையாளுபவர் ஆகியரோடு சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அங்கு சென்ற போது, ஆண் சடலத்தின் சட்டையை மோப்பமிட்ட துங்கா 2 என்ற மோப்ப நாய், கொலையாளி இருக்கும் இடத்தை நோக்கி ஓடியது. துங்கா 2 மற்றும் அதைக் கையாளுபவர், சுமார் 8 கி.மீ தூரம் ஓடிய பின்பு, பெரிய சத்தம் கேட்ட ஒரு வீட்டில் நாய் நின்றது. இதன் மூலம், அந்த வீட்டிற்கு சென்ற போலீசார், ஒரு நபர் ஒரு பெண்ணை இரக்கமின்றி அடித்து கொலை செய்ய முயற்சிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பெண்ணைக் கொலை செய்ய முயன்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், போலீசார் தேடி வந்த கொலையாளி அந்த நபர் தான் என்றும் அவரது பெயர் ரங்கசாமி என்றும் தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட சந்தேபென்னூரைச் சேர்ந்த சந்தோஷும், ரங்கசாமியின் மனைவியும் திருமணத்தை மீறிய உறவில் இருந்தததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ரங்கசாமிக்கு தெரியவர, ஆத்திரமடைந்து சந்தோஷை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு, தனது மனைவியைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, வீட்டிற்கு வந்த ரங்கசாமி, தனது மனைவியை அடித்து கொலை செய்யும் நேரத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது தெரியவந்தது. கொலையாளியைக் கண்டுபிடிக்க மழையில் 8 கி.மீ ஓடி நொடி பொழுதில் பெண் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய துங்கா 2 என்ற மோப்ப நாயை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.