பள்ளிக்குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவில் பாம்பு விழுந்திருந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சத்துணவு திட்டத்தை முன்னோடியாக கொண்டு மகாராஷ்டிராவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு 1996 முதல் நடைபெற்று வருகிறது.
அதன்படி மகாராஷ்டிராவில் நான்தெத் மாவட்டத்தில் உள்ள தொடக்க பள்ளியில் இன்று காலை உணவுக்காக கிச்சடி தயார் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு பரிமாறப்பட்டது. 80 குழந்தைகளுக்கு மேல் உணவு பரிமாறப்பட்ட நிலையில் சமையல் செய்த அண்டாவில் பாம்பு இறந்து கிடப்பதை ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அவசர அவசரமாக குழந்தைகள் சாப்பிடுவது தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்த நிலையில், சமையல் செய்தவரை வேலையை விட்டு நிரந்தரமாக அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் செய்து வருகின்றனர். இது குறித்து அம்மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் கூறும் போது அப்படி எந்த சம்பவமும் நடந்ததாக தங்களுக்கு தெரியவில்லை என பதிலளித்தனர்.