சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி திடீரென நள்ளிரவில் மேக வெடிப்பால் பெய்து தீர்த்த மழையால், அங்குள்ள தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான முகாம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. இதில் 22 ராணுவ வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதனையடுத்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. இதன் காரணமாக 2500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் வெள்ளப் பெருக்கில் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 1300 வீடுகளும், 13 பாலங்களும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்களில் 9 பேரின் உடல்கள் உள்ளிட்ட 32 பேரில் உடல்கள் இன்று ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 56 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.