நாடாளுமன்றத் தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்குச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
32 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சிக்கிம் மாநிலத்தில் பிரேம்சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆளும் கட்சியாக இருந்து வந்தது. 32 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 17 இடங்கள் தேவை என்ற பட்சத்தில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, சிக்கிம் ஜனநாயக முன்னணி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. ஏப்ரல் 19ஆம் தேதி சிக்கிம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ஆம் தேதி எண்ணப்பட்டது. அதில் அதிக பெரும்பான்மையாக 31 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி கைப்பற்றி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் இரண்டாவது முறையாக அம்மாநிலத்தின் முதல்வராகக் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். இதற்கிடையே, சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதல்வரின் மனைவி கிருஷ்ண குமார் ராய், நாம்சி-சிங்கிதாங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து, நேற்று முன் தினம் (12-06-24) சிக்கிம் மாநில சட்டசபையில் நடந்த பதவியேற்பு விழாவில், முதல்வரின் மனைவி கிருஷ்ண குமார் ராய் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
இந்த நிலையில், கிருஷ்ண குமாரி ராய் நேற்று (13-06-24) திடீரென்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். கிருஷ்ண குமாரி ராயின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாகச் சட்டசபை செயலாளர் உறுதி செய்தார். பதவியேற்ற அடுத்த நாளே சிக்கிம் மாநில முதல்வரின் மனைவி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.