கர்நாடகா மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸின் இந்த வெற்றி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ.கவுடன் இணையப் போவதாக அடிக்கடி தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால், குமாரசாமியும், ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரான தேவகவுடாவும் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் என ஜனதா தள கட்சியின் தலைவர் தேவகவுடா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, கர்நாடகா முதல்வர் சித்தராமையா பா.ஜ.க.வில் சேர விரும்புவதாகவும், இது தொடர்பாக பா.ஜ.க தேசிய தலைவர்களை அடிக்கடி சந்தித்து வருவதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்க முடிவு செய்ததாக கூறினார். மேலும், அவர் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜனதா தள கட்சி 4 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், மற்ற 24 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடும் என்று கூறி கூட்டணியை உறுதி செய்தார்.
இது குறித்து பெங்களூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் சித்தராமையா, “நான் ஜனதா தள கட்சியை அடிக்கடி பா.ஜ.க.வின் பி டீம் என்று சொல்லும் போதெல்லாம் கோபப்படுவார்கள். ஆனால் இன்றைக்கு அவர்களே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துவிட்டார்கள்” என்று கூறினார். அப்போது, சித்தராமையா பா.ஜ.க.வில் இணைய விரும்புவதாக குமாரசாமி கூறியது குறித்து செய்தியாளர்கள் தரப்பில் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அவர், “நான் பா.ஜ.க.வில் இணைவேன் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? பல்வேறு சூழ்நிலைகளில் சிலரை சந்தித்திருப்போம். அதற்காக நான் அவர்களின் கட்சியில் சேருவேன் என்று அர்த்தம் இல்லை. சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன். அதற்கு முன்னதாக எல்.கே. அத்வானியை சந்தித்தேன். அத்தகைய சந்திப்புகளால் நான் அவர்களின் கட்சியில் சேருவேன் என்று அர்த்தம் இல்லை. இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால் எனது சடலம் கூட பா.ஜ.க.வில் சேராது. எனது அரசியல் வாழ்க்கை முழுவதும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரானது. அதனால், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் கருத்து மிகவும் வேடிக்கையாக இருக்கிறது” என்று கூறினார்.