2024 ஆம் ஆண்டின் 75வது குடியரசு தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. மேலும், தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா வரும் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. டெல்லியில், ஒவ்வொரு ஆண்டிலும் குடியரசு தினவிழாவின் போது அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பில் ஒவ்வொரு மாநிலங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அந்த மாநில அலங்கார ஊர்திகள் இடம் பெறும். இதற்காக மத்திய அரசு முன்கூட்டியே, மாநிலங்கள் அனுப்பும் மாடல்களை பரிசீலனை செய்து விழாவில் இடம்பெறும் ஊர்திகளை தேர்வு செய்யும்.
அந்த வகையில், இந்த ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் தங்கள் மாநில ஊர்திகளின் மாடல்களை அனுப்பியிருந்தது. அதன்படி, கர்நாடகா மாநில ஊர்திகளை சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை அம்மாநில அரசு அனுப்பியிருந்தது. ஆனால், கர்நாடகா அரசு அனுப்பியிருந்த அனைத்து பரிந்துரைகளையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவின் ஊர்திக்கு அனுமதி அளிக்காததன் மூலம் ஏழு கோடி கன்னடர்களை மத்திய அரசு அவமதித்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதில் கர்நாடகா ஊர்திக்கு மத்திய அரசு வாய்ப்பளிக்கவில்லை. இதன் மூலம், மத்திய அரசு ஏழு கோடி கன்னடர்களை அவமதித்துள்ளது. கடந்த ஆண்டும் கூட கர்நாடகா அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு வாய்ப்பு அளிக்க மறுத்தது. அதன் பின்னர், கர்நாடகா சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு அலங்கார ஊர்திக்கு அனுமதித்தனர். இப்போது இந்த முறையும் கன்னடர்களை இழிவுபடுத்தும் போக்கை மத்திய அரசு தொடர்ந்துள்ளது.
மாநிலத்தின் வளர்ச்சி, சமூக நியாய ஊர்தி, நீர்ப்பாசனம், பேக்கிங் அடிப்படை வசதிகள் வளர்ச்சி, மைசூரை முன் மாதிரி ராஜ்ஜியமாக உருவாக்கிய நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் ஊர்தி, பெங்களூரில் கிராம தேவதை, 10ஆம் நூற்றாண்டில் கட்டிய அன்னம்மா தேவி கோவில் ஊர்தி உட்பட நான்கு ஊர்திகளுக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், மத்திய அரசு, எங்கள் வேண்டுகோள் அனைத்தையும் நிராகரித்துவிட்டது. மாநிலத்தின் சாதனை மற்றும் சாதனையாளர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பை மத்திய அரசு பறிக்கிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருப்பதை, பா.ஜ.கவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. வரிப்பகிர்வு முதல் வறட்சி நிவாரணத்தில் அநீதி வரை, கன்னடர்களால் கட்டப்பட்ட வங்கிகள், துறைமுகங்கள், விமான நிலையங்களை விற்பது வரை மத்திய அரசு தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போது, அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததன் மூலம், மீண்டும் எங்கள் அடையாளத்தைத் தாக்கியுள்ளது.
கர்நாடகா பா.ஜ.க இந்த அநீதியை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. பா.ஜ.க எம்.பி.க்கள் நரேந்திர மோடியின் கைப்பாவையாகி விட்டனர். அவர்கள் யாருக்கு விஸ்வாசமாக இருக்கிறார்கள்? கன்னடர்களுக்கா? அல்லது நரேந்திர மோடிக்கா?. கன்னடம் மற்றும் கர்நாடகாவுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருவதால் கன்னடர்கள் ஏற்கெனவே கொதிப்படைந்துள்ளனர். அவர்களின் பொறுமையை மத்திய அரசு சோதிக்கக் கூடாது. இனியும் தாமதிக்காமல், மத்திய அரசு தனது தவறை உடனடியாக சரிசெய்து, கவுரவமிக்க குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகா அலங்கார ஊர்திக்கு அனுமதித்து கர்நாடகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.