இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தடுப்பூசியே தீர்வாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில், இந்தியாவில் தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் தடுப்பூசி இறக்குமதிக்காக உலகளாவிய டெண்டர் கோரப்போவதாக அறிவித்துள்ளன.
இந்தநிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த செவ்வாய்க்கிழமை, அம்மாநிலத்தில் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் மெதுவாக இருப்பது குறித்து மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தது. இந்தநிலையில் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்களிடம் நீதிமன்றத்தின் விமர்சனம் தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, "நீதிமன்றம் நல்ல நோக்கத்தில் நாட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்று கூறியுள்ளது. நாளை ஒரு குறிப்பிட்ட அளவு தடுப்பூசி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறி, அந்த அளவு தடுப்பூசி இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றால், நாங்கள் தூக்கிட்டுக்கொள்ள வேண்டுமா?. இந்த விஷயங்களைப் பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து அவர், “சில குறைபாடுகள் இருக்கலாம். எதிர்பார்த்தபடி தயாரிப்பு இல்லையென்றால், தேவையான மூலப்பொருட்கள் மற்ற நாடுகளிலிருந்து வராதபோது, சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாதபோது நாம் என்ன செய்யமுடியும்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் சதானந்த கவுடா, “முன்னதாக நாங்கள் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கியபோது தடுப்பூசிகளுக்குப் பெரிய அளவு தேவை இல்லை. மேலும், 18 முதல் 45 வயதுள்ளோர்களுக்கும் தடுப்பூசியை வழங்க முடியும் என்று நாங்கள் நினைத்தோம். நாடு முழுவதும் இரண்டாவது அலை அதிகரித்தவுடன் மக்கள் தடுப்பூசிகளுக்காக விரையத் தொடங்கினர். நாங்கள் எங்கள் நிலையை சரியாக்க முயற்சிக்கிறோம், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் விஷயங்கள் சரி செய்யப்படும்" என்றார்.
மத்திய அமைச்சருடன் ஊடகத்தைச் சந்தித்த பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி, "நீதிபதிகள் அனைத்தும் அறிந்தவர்கள் அல்ல. எங்களிடம் இருப்பதை தொழிற்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கேற்ப வழங்க வேண்டும்" என கூறினார்.