பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகிவருகின்றன.
இந்தச் சூழலில், கரோனா ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவி செய்து பிரபலமான நடிகர் சோனு சூட், பஞ்சாப் தேர்தலில் தனது தங்கையைக் களமிறக்குகிறார். நேற்று (14.11.2021) தனது வீட்டில் தங்கையோடு பத்திரிகையாளர்களைச் சந்தித்த சோனு சூட் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சோனு சூட், "எனது சகோதரி மாளவிகா பஞ்சாப் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறார். அடுத்த ஆண்டு பஞ்சாப் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். எங்கள் குடும்பத்தின் மீது மக்கள் எப்போதும் பொழியும் அன்பையும் மரியாதையையும் அவர்களுக்கு திருப்பி அளிக்க விரும்புகிறார்" என தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தனது தங்கை எந்த கட்சியின் சார்பாக போட்டியிடுவார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் சோனு சூட் கூறியுள்ளார்.
சோனு சூட்டின் தங்கை மாளவிகா சூட், தனது சகோதரரின் சூட் தொண்டு அறக்கட்டளை மூலம் சமூக சேவையில் ஈடுபட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை (12.11.2021) பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை சோனு சூட் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், தனது தங்கை அரசியல் நுழைவு குறித்த அறிவிப்பை சோனு சூட் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என சோனு சூட்டிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "ஒருவரின் வாழ்க்கையில் அரசியலில் நுழைவது என்பது பெரிய முடிவு. ஏனென்றால் மக்களுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். முதலில், மாளவிகாவுக்கு ஆதரவளிப்பது முக்கியம். எனது சொந்த திட்டங்களை பின்னர் வெளியிடுவேன்" என கூறியுள்ளார்.