ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல், வேறு வேறு தேதிகளில் பல்வேறு கட்டங்களாக நடைபெறுகின்றது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய இரண்டு மாநிலங்களில் முதல் கட்டத் தேர்தல், கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இம்மாநிலங்களில் இரண்டாம் கட்டத் தேர்தல், கடந்த 01.04.2021 அன்று நடைபெற்றது. அதில் வாக்காளருக்கு சொந்தமான காரில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. தேர்தல் அதிகாரிகளின் வாகனம் பழுதானதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள், லிஃப்ட் கேட்டு கொண்டு செல்லப்பட்டதாகவும், அது வேட்பாளருக்குச் சொந்தமான கார் எனப் பிறகுதான் தெரியவந்தது எனவும் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, நான்கு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அசாமில் (இரண்டாம் கட்டத் தேர்தல்) ஒரு வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப் பதிவு குளறுபடி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாமின் ஹப்லாங் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில், மொத்தம் 90 வாக்காளர்களே இருந்த நிலையில், அங்கு 171 பேர் வாக்களித்துள்ளனர். கிராமத் தலைவர், அதிகாரிகள் வைத்திருந்த வாக்காளர் பட்டியலை ஒப்புக்கொள்ளாமல், புதிதாக வாக்காளர் பட்டியலை கொண்டுவந்து அதன்படி வாக்குப்பதிவு நடத்த வலியுறுத்தியதாகவும், அதனைத் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் ஏற்றதாகவும் கூறப்படுகிறது. கிராமத் தலைவர் கொண்டுவந்த வாக்காளர் பட்டியலை, அதிகாரிகள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்ற காரணம் தெரியவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக, மாவட்டத் தேர்தல் அதிகாரி, 5 தேர்தல் நடத்தும் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.