'கீதா கோவிந்தம்' திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரை உலகில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'புஷ்பா' உள்ளிட்ட படங்களில் நடித்ததோடு தமிழில் 'சுல்தான்' என்ற படத்திலும் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
அண்மையில் சமூக வலைத்தளங்களில் அவருடைய முகத்துடன் ஆபாசமாக உடை அணிந்த பெண் ஒருவர் லிப்ட் ஒன்றுக்குள் நுழைவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில் இருப்பது நடிகை ராஷ்மிகா மந்தனா எனப் பலரும் கருதி கருத்துக்களைத் தெரிவித்தனர். ஆனால் அது எஐ டீப் பேக் (AI DEEP FAKE) எனும் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று தெரியவந்துள்ளது.
அந்த வீடியோ காட்சியில் உள்ள உண்மையான பெண்ணின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இருப்பது ராஷ்மிகா மந்தனா இல்லை என்பதும் பிரிட்டிஷ் இந்திய பெண் ஒருவரின் வீடியோவை எஐ டீப் ஃபேக் தொழில் நுட்பத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா போன்று சித்தரித்து பரப்பப்பட்டது தெரியவந்துள்ளது. அமிதாப்பச்சன் உள்ளிட்ட நடிகர்கள் இது குறித்து தங்களுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ரஷ்மிகா மந்தனா, தனது எக்ஸ் பதிவில், 'தன்னை வைத்து இணையத்தில் பகிரப்பட்டு வரும் எஐ டீப் ஃபேக் (AI DEEP FAKE) வீடியோ மிகுந்த மன வலியை தருகிறது. தொழில்நுட்பத்தை இவ்வளவு தவறாக பயன்படுத்தியது பயத்தை ஏற்படுத்துகிறது. தனக்கு ஊன்றுகோலாகவும் பாதுகாப்பு கவசமாகவும் இருக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றி கூற இந்த நேரத்தில் கடமைப்பட்டுள்ளேன். இந்த சம்பவம் நான் பள்ளியிலோ, கல்லூரியிலோ படிக்கும்போது நடந்திருந்தால் அதன் விளைவுகளை நான் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. இதுபோன்ற அடையாளத் திருட்டால் பலரும் பாதிக்கப்படுவதற்கு முன் இதை ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும்' என வேண்டுகோள் வைத்துள்ளார்.