சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் தற்போது தொடங்கி உள்ளன. சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதேபோல் மிசோரம் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவும் தொடங்கியுள்ளது.
மிசோரத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 40 தொகுதிகளிலும் சுமார் 8.52 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 170 வேட்பாளர்கள் மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மிசோரம் முதல்வர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு சென்றிருந்த நிலையில், அங்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிக்காமலேயே அவர் திரும்பிச் சென்றது நிகழ்ந்துள்ளது. அய்ஸ்வால் வடக்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அய்ஸ்வால் வெங்கலை ஒன்று பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மிசோரம் முதல்வர் சோரம் தங்கா வாக்களிக்கச் சென்றிருந்தார். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.