மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களாக இரு கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
காங்கிரஸ், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என முக்கிய கட்சிகள் அனைத்திற்கும் மத்தியில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் இன்னும் இழுபறியே நீடித்து வருகிறது. வரும் 9 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைவதால் ஆட்சியமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் மகாராஷ்டிரா கட்சிகள் உள்ளன. இந்நிலையில், சிவசேனா கட்சி எம்.எல்.ஏ க்கள் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரே வீட்டில் காலை நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிவடைந்த பிறகு, அதே பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டலில் அவர்கள் ஒன்றாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.