மகாராஷ்டிராவில், வரும் நவம்பர் 20ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், நவம்பர் 23ஆம் தேதியன்று எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி நிறைவு பெற்றது.
இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்திக்கிறது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கூட்டணி கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளது.
சரத் பவார் குடும்பத்தின் கோட்டையான பாராமதி தொகுதியில், பா.ஜ.க கூட்டணி சார்பாக அஜித் பவார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அஜித் பவாரின் சகோதரர் மகன் யுகேந்திர பவார், சரத்சந்திர பவார் - தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். சரத்சந்திர பவார் - தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் யுகேந்திர பவாரை ஆதரித்து சரத் பவார் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், நேற்று ஷிர்சுபால் பகுதியில் யுகேந்திர பவாரை ஆதரித்து சரத் பவார் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சரத் பவார் பேசியதாவது, “நான் ஆட்சியில் இல்லை. மேலும், எனது மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் முடிய இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அதன் பிறகு நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். நான் எங்காவது நிறுத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக 14 முறை என்னை எம்பியாகவும், எம்எல்ஏவாகவும் போட்டியிட்டுள்ளேன். "ஒருமுறை இரண்டு முறை அல்ல, நான்கு முறை என்னை முதல்வராக்கினீர்கள். 1967ல் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள், மகாராஷ்டிராவுக்காகப் பணியாற்றுவதற்கு முன் 25 ஆண்டுகள் இங்கு பணியாற்றியுள்ளேன்.
ஆனால்,மீண்டும் மாநிலங்களவைக்குச் செல்லலாமா வேண்டாமா என்று யோசித்து முடிவு வேண்டும். நாம் இப்போது எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும். இப்போது ஒரு இளம் மற்றும் ஆற்றல்மிக்க தலைமையை தயார் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு வேலை செய்யும் தலைமையை நாங்கள் வளர்க்க வேண்டும். நான் மக்களவையில் போட்டியிட மாட்டேன். நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். ஆனால், மக்களுக்காக தொடர்ந்து சமூகப் பணிகளைச் செய்வேன்” என்று கூறினார்.