உஸ்பெகிஸ்தானில் இரண்டு நாட்கள் நடைபெறும் 22ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்று (15/09/2022) தொடங்குகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு ஒன்பது நாடாக ஈரான், இந்த அமைப்பில் இணைய உள்ளது. ஆண்டுக்கு ஒரு நாடு சுழற்சி முறையில் இந்த மாநாட்டிற்கு தலைமை வகிக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்க்கெட் நகரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
கரோனா தொற்றுக்கு பிறகு நேரடியாக நடைபெறவுள்ள மாநாடு என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தனியே சந்தித்துப் பேச உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
ஆசிய- பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, ஐ.நா. மற்றும் ஜி 20க்கு அமைப்புக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரண்டு பேரும் விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல், சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும், இந்திய பிரதமர் நேரில் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு செல்லும் பிரதமர், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்.