மத்தியப் பிரதேசம் மாநிலம், சாகர் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவர், கடந்த 2019ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பான விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், கடந்த 2020 பா.ஜ.க பிரமுகரான விக்ரம் சிங் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
இதனையடுத்து, பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற வேண்டும் என விக்ரம் சிங் கும்பல், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டியதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 15 வயதான சிறுவன் ஆசாத் தாக்கூர், விஷால் தாக்கூர், புஷ்பேந்திர தாக்கூர் மற்றும் சோட்டு ரைக்வார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இதற்கிடையில், கடந்த 2020ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற வேண்டும் என தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டி வந்துள்ளனர். அதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கடந்த ஆண்டு பரிதாபமாக கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி, இந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல வந்துள்ளார். அப்போது, எதிர்தரப்பினர் வழக்கை வாபஸ் பெறச் சொல்லி வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட மோதலால், அப்பெண்ணின் உறவினர் அடித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து, அந்த பெண் உறவினரின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி தனது சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த ஆம்புலன்ஸ் மர்மமான முறையில் விபத்தில் சிக்கியுள்ளது. இதில், வாகனத்தில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து மர்மமான உயிரிழந்துள்ளது மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.