காலிஸ்தான் பயங்கரவாதிகள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்று பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் காலிஸ்தானுக்கான கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் தலைமையில் காலிஸ்தான் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இருந்த ‘நீதிக்கான சீக்கியர்’ குழுவை, பிரிவினை ஏற்படுத்துவதன் காரணமாக உபா (UAPA) சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. மேலும், 2020 ஆம் ஆண்டில் இந்திய அரசு, காலிஸ்தான் குழுக்களுடன் தொடர்புடைய 9 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது
பஞ்சாப்பை சேர்ந்த நிஜார், 1997ல் கனடாவில் இடம்பெயர்ந்து காலிஸ்தான் டைகர் போர்ஸ் தலைவராகவும், சிக்ஸ் பார் ஜஸ்டிஸ் அமைப்பின் கனடா பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்த இரண்டு அமைப்புகளுமே, பிரிவினை தாக்குதலை ஏற்படுத்துவதன் காரணமாக இந்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் ஆகும். இந்த நிலையில் தான், ஹர்தீப் சிங் கனடாவின் சுரே நகரின் குருத்துவாரா அருகில் உள்ள அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்களால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். நிஜ்ஜார் படுகொலைக்கு, இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்க, அதற்கு இந்தியா மறுத்து கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது கனடா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடந்த 14ஆம் தேதி புகார் அளித்தது. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுப்பு தெரிவித்து இந்தியாவில் உள்ள கனடாவின் தூதர் ஸ்டூவர்ட் வீலருக்கு சம்மன் அனுப்பி கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்தது. மேலும், இந்தியாவில் உள்ள கனடா தூதர்கள் 6 பேர் வெளியேற்றி, இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நவம்பர் 1ஆம் தேதி 19ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி குர்பத்வந்த் பன்னுன் நேற்று முன்தினம் (21-10-24) எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சீக்கிய இனப்படுகொலையின் 40வது ஆண்டு நினைவு ஆண்டை முன்னிட்டு, குறிப்பிட்ட தேதிகளில் ஏர் இந்தியா விமானம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள பல விமான நிறுவனங்களுக்கு குண்டுவெடிப்பு மிரட்டல்கள் வரும் நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி குர்பத்வந்த் பன்னுன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வேறு பெயரிடப்படும் என்றும், நவம்பர் 19ஆம் தேதி அன்று அந்த விமான நிலையம் மூடப்படும் என்றும் குர்பத்வந்த் வீடியோ மூலம் செய்தி வெளியிட்டு அன்றைய தினம் அந்த விமானத்தில் யாரும் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் இவர், இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குநர் கவரவ் யாதவ் ஆகியோரை கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்து, ஜனவரி 26ஆம் தேதி பகவந்த் மான் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.