பட்டமளிப்பு விழாவிற்கு வந்த ஆளுநரை மாணவர்க வழிமறித்து தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக கோஷம் எழுப்பியதால் ஆளுநர் திரும்பி சென்ற சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கர், கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது எதிர்ப்பு தெரிவித்து அவரது வாகனத்தை சூழ்ந்தனர். கருப்பு கொடி மற்றும் பதாகைகளுடன் அவரை சூழ்ந்த்திருந்த மாணவர்கள் தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் ஆளுநருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதன்காரணமாக அங்கிருந்து ஆளுநர் வெளியேறினார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு பல்கலைக்கழக வேந்தர் மற்றும் ஆளுநராக எனக்கு ஒரு வேதனையான தருணம். உள்ளே இருக்கும் மாணவர்கள் தங்கள் பட்டங்களை பெறுவதற்காக காத்திருக்கிறார்கள். ஆனால் வெளியே ஒருசிலர் என்னை தடுத்து வைத்தனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மாநில அரசு கல்விதுறையையே தனது பிடிக்குள் வைத்துள்ளது" என தெரிவித்தார்.