![Seniors break the hand of an 11th grade student to ragging atrocity in Kerala](http://image.nakkheeran.in/cdn/farfuture/yi0aKlr3VyaPP0JtGAMJwd4LEmktE0LvGOCP5oTZJGo/1739602957/sites/default/files/inline-images/seniorn.jpg)
இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் 5 பேர் கடந்த 3 மாதங்களாக தொடர்ச்சியாக ராக்கிங் செய்து கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மாணவர்களை வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கி, அவர்களின் ஆணுறுப்புகளில் டம்பிள்ஸ்களைத் தொங்கவிட்டும், கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தியும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பான கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சீனியர் மாணவர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களுக்கு, ஆளும் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் மீண்டுமொரு ராகிங் கொடுமை அரங்கேறியுள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நிஹால் என்பவர், கொலவலூர் பி.ஆர் நினைவுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். தங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி சீனியர் மாணவர்கள் சிலர், முகமது நிஹாலை ராகிங் செய்துள்ளனர். மேலும், அவரது கையை உடைத்து காயத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், மாணவரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த முகமது நிஹால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.