உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஜிதின் பிரசாதா மத்திய இணையமைச்சராகப் பதவி வகித்தவர்.
ஒருகட்டத்தில் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்தார். பின்பு காங்கிரஸ் கட்சியின் ஜி-23 குழுவில் இணைந்து செயல்பட்டார். இந்தக் குழு காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியில் உள்ள தலைவர்களைக் கொண்ட குழுவாகும். இந்நிலையில்தான் அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.
ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலின் முன்னிலையில் பாஜகவில் இணைந்த ஜிதின் பிரசாதா, பாஜக மட்டுமே தேசியக் கட்சி என தெரிவித்தார். மேலும் காங்கிரஸில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து பேசிய அவர், "நான் அரசியலால் மட்டுமே சூழப்பட்ட ஒரு கட்சியில் இருக்கிறேன் என்று உணர ஆரம்பித்தேன். மக்களுக்காக எனது பங்களிப்பை ஆற்ற முடியவில்லை, அவர்களின் நலனுக்காகப் பணியாற்ற முடியவில்லை என ஆரம்பித்தேன். அதனால் விலகினேன்" என கூறியுள்ளார்.