பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏ.டி.ஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (15.02.2024) தீர்ப்பு வழங்கியது.
அதில், ‘தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்புப் பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.
தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்ட விரோதம் ஆகும். தேர்தல் பத்திரங்களை வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தேர்தல் பத்திரங்கள் என்பது மோடியின் முட்டாள்தனமான யோசனை. ஊழலுக்கு எதிராக போராடும் பா.ஜ.க.வின் கூற்றை காயப்படுத்தும் பெரிய ஊழலாக மாறியதால் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பா.ஜ.கவின் நலனுக்காக மோடி பதவி விலக வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.