கங்கை நதியில் குப்பை போடுவோரை புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு 500 பரிசு
கங்கை நதியை துாய்மையாக்கும் திட்டத்தின் கீழ், நதியில் குப்பை போடுபவர்களை புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு பரிசு வழங்க, உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாகை நகர நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பாஜக, ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ருத்ரபிரயாகையில், புனித கங்கை நதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில், குப்பை போடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், ருத்ரபிரயாகை நகர நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, கலெக்டர் மங்கேஷ் கில்டியால் கூறியதாவது:
நதியில் குப்பை போடுவோர் மீது வழக்கு பதிவு செய்து, சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நதி மற்றும் கரையோரங்களில் குப்பை போடுபவர்களை புகைப்படம் எடுத்து, அனுப்புவோருக்கு, 500 ரூபாய் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.