இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் வீட்டருகே சில மாதங்களுக்கு முன்னர், வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பல்வேறு திருப்பங்களோடு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை, மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வேஸ் உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளது. இந்தநிலையில் நேற்று (08.11.2021) மும்பை போலீசாரை தொடர்புகொண்ட கால் டாக்சி டிரைவர் ஒருவர், பைகளோடு காரில் வந்த இரண்டு நபர்கள் முகேஷ் அம்பானியின் இல்லத்தைக் கேட்டதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை மும்பை போலீசார் சோதனை செய்தனர். மேலும், துணை ஆணையர் மட்டத்திலான அதிகாரி ஒருவர் நிலைமையைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், முகேஷ் அம்பானியின் இல்லத்தை விசாரித்த இரண்டு நபர்களில் ஒரு நபரை கண்டுபிடித்துள்ள போலீசார், அவரை தங்கள் கஸ்டடிக்கு கொண்டுவந்து விசாரித்துவருகின்றனர்.
அந்த நபரிடம் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் குஜராத்தைச் சேர்ந்த சுரேஷ் விசான்ஜி படேல் என்பதும், கால் டாக்சி டிரைவரான அவர், மும்பையைச் சுற்றிப்பார்க்க வந்ததும், அதன் காரணமாக அம்பானி வீடு குறித்து விசாரித்ததும் தெரியவந்துள்ளது. இருப்பினும், அம்பானியின் வீட்டிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை முழுமையாக உறுதிசெய்ய அந்த நபரிடம் முழுமையாக விசாரணை நடத்தப்படும் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.