குறும்பு செய்த இரண்டாம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கட்டடத்தின் ஒரு தளத்திலிருந்து தலைகீழாகத் தொங்கவிட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் மிர்ஷாப்பூரில் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த சோனு யாதவ் என்ற சிறுவன் வகுப்பில் குறும்பு செய்ததாகக் கூறப்படும் நிலையில், சோனு சக மாணவரைக் கடித்து வைத்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகார் அப்பள்ளியின் தலைமையாசிரியர் மனோஜ் விஸ்வகர்மாவிற்குச் சென்ற நிலையில், மாணவன் சோனு யாதவை பிடித்து விசாரித்த ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா, கடித்துத் துன்புறுத்திய மாணவனிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கீழே போட்டுவிடுவேன் என மாணவன் சோனுவை முதல் தளத்திலிருந்து கைகளில் பிடித்து கீழே தொங்கவிட்டு அச்சுறுத்தியுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா கைது செய்யப்பட்டார். அண்மையில் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பை கட்டடித்த 12 ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் மூர்க்கத்தனமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.