நாட்டின் 18 வது மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் 80 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 14 தொகுதிகளுக்கு வரும் 20 ஆம் தேதி 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, பெற்றோர்கள் வாக்களித்தால் பிள்ளைகளுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வி குழுமம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த பள்ளி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளுக்கு மறுநாள்(21.5.2024) அன்று எங்களின் குழுமத்தின் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர்கள் கூட்டம் நடைபெறும். அப்போது வாக்களித்த அடையாள மையை காட்டினால், அடுத்து வரும் தேர்தலில் அவர்களின் பிள்ளைகளுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மேலும், இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள், இதர அலுவலர்கள் என யார் வாக்களித்தாலும் அவர்களுக்கு ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை அதிகப்படுத்த செயிண்ட் ஜோசப் கல்வி குழுமம் எடுத்துள்ள இந்த முன்னெடுப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.