விபத்து காப்பீடு பணத்தை பெறுவதற்காக பெண் ஒருவர் திட்டமிட்டு வினோத செயலில் ஈடுபட்ட சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிக்ககோலிக்கா எனும் கிராமம். இங்கு வசித்து வருபவர் முனுசாமி கவுடா.இவருடைய மனைவி சில்பா ராணி. கடந்த 13ஆம் தேதி முனுசாமி கவுடா சாலையில் கார் டயர் மாற்றிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக அங்கு வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முனுசாமி கவுடாவின் உடலைக் கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் காரினுடைய எண் மற்றும் அவரிடமிருந்த அடையாள அட்டை ஆகியவற்றை வைத்து முனுசாமி கவுடாவின் மனைவி சில்பா ராணிக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த சில்பா ராணி உயிரிழந்தது என் கணவர் தான் என அடையாளம் காட்டியதோடு, சடலத்தையும் வாங்கிச் சென்று இறுதிச் சடங்குகளை செய்துள்ளார். மறுபுறம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி இருந்தது. அந்த அறிக்கையில் வந்த தகவல் போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
நடந்தது லாரி விபத்து அல்ல யாரோ ஒருவர் அடித்துக் கொலை முனுசாமி கவுடாவை கொலை செய்தது தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநர் தேவேந்திர நாயக் என்பவரை கைது செய்த போலீசார் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் போலீசாருக்கே அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்களை லாரி ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
நடந்தது விபத்து இல்லை என ஒப்புக் கொண்ட லாரி ஓட்டுநர், இறந்தது முனுசாமி கவுடாவே இல்லை என தெரிவித்தது போலீசாரின் அதிர்ச்சிக்கு காரணமானது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கணவர் முனுசாமி கவுடா பல கோடி ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீடு திட்டம் செய்துள்ளார். எனவே அவர் இறந்தால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் இருந்த மனைவி சில்பா ராணி அவரை போலவே உருவம் கொண்ட பிச்சைக்காரர் ஒருவரை அடித்துக் கொன்று விட்டு இவர் என்னுடைய கணவர் என நாடகமாடியது தெரியவந்தது.
இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த லாரி ஓட்டுநர், அதேபோல் உண்மையான கணவர் முனுசாமி கவுடா, சில்பா ராணி உள்ளிட்ட 5 பேரை இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர்.