Skip to main content

மருத்துவ மேற்படிப்பு; ஓபிசி பிரிவினருக்கான  27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

supreme court

 

நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில், பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவதில் வருமான உச்சவரம்பாக 8 லட்சத்தை நிர்ணயித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினரின் குடும்ப வருமானம் 8 லட்சமாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருந்தால் 10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர முடியாது. அதேபோல் ஓபிசி பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

 

இவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது அவ்வப்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தசூழலில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்குவது குறித்த வழக்கில் தாங்கள் தீர்ப்பளிக்கும் வரையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நிறுத்திவைப்பதாக உத்தரவாதம் அளிக்க மத்திய அரசை அறிவுறுத்தினர். இதனையடுத்து, மத்திய அரசும் அவ்வாறே உத்தரவாதம் அளித்தது.

 

இந்த சூழலில்  முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தாமதமாவதை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மத்திய அரசு,  ஒபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்குவது குறித்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இரண்டு நாளாக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தற்போது அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.

 

மேலும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நடத்தவும் உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அதேநேரத்தில் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்கலாம் என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு வரம்பு செல்லுபடியாகும் தன்மை குறித்து மார்ச் 3, 2022 இல் தீர்ப்பளிக்கப்படும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்