குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறக்கப்பட்டதிலிருந்து சிலைக்கு ஏற்பட்ட செலவு குறித்தும் சிலை அமைப்பதற்கான தேவை குறித்தும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் பல பிரச்சனைகள் குறித்தும் வாய்மொழி, எழுத்து, மீம்ஸ் என அத்தனை வழியிலும் இணைய உலகில் விமர்சனங்கள் பெருகிப் பரவி வருகின்றன. இருப்பினும் பாஜகவினரும் ஒரு சாராரும் பட்டேல் சிலையை மோடி திறந்துவிட்டாரென்று பெருமைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கார்ட்டூனிஸ்ட் சத்திஷ் ஆச்சாரியா, தன் வலைதளத்தில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டுள்ளார்.
நன்றாக இயங்கிக் கொண்டிருந்த அரசுத்துறை நிறுவனங்கள் எதையெதை செயல்படாத சிலையாக்கியிருக்கிறார் மோடி என்று அதில் காமெடியாக சித்தரித்திருக்கிறார். அதிகாரம் என்ற ரிமோட் மூலமாக, தேர்தல் ஆணையத்தையும், அமலாக்கத் துறையையும், சிபிஐயையும், ஆர்பிஐயையும் யுஜிசியையும் ஏற்கெனவே சிலைகளாக்கி இருக்கிறார். அடுத்து தன்னையும் ஆக்கிவிடுவாரோ என்ற அச்சத்தில் நீதிதேவதை ஒளிந்து கொண்டிருந்தாலும் அதையும் சிலையாக்க ரிமோட்டுடன் மோடி தேடுவதாக அவர் கார்ட்டூன் வரைந்துள்ளார். இந்த கார்ட்டூன் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.