
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல் நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கிறார்.
கடந்த மூன்று நாட்களாக அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. அதேபோல் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயற்கையாக அவர் சுவாசிப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று 10.30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படும் சசிகலா, பெங்களூருவில் 5 நாட்கள் தங்கியிருந்து கரோனா தடுப்பு விதிகளின்படி ஐந்து நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி ஐந்தாம் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் திரும்புவார் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐந்து நாட்கள் பெங்களூருவில் அவர் தங்கி இருக்கப் போகின்ற இடம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அவர் சாலை மார்க்கமாக தமிழகம் வருவாரா அல்லது விமானம் மூலம் தமிழகம் திரும்புவாரா என்பது தொடர்பான தகவலும் வெளியாகவில்லை.