சர்தார் சரோவர் அணையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் கெவாடியா பகுதியில் கட்டப்பட்டுள்ள, இந்தியாவிலேயே மிகப்பெரிய அணையான சர்தார் சரோவர் அணையை தனது 67வது பிறந்ததினமான இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணை கிட்டத்தட்ட 4 கோடி மக்களுக்கு பயன்தரக்கூடியது. அடிக்கல் நாட்டப்பட்டு 56 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அணையின் பணிகள் பலமுறை, அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் தடைப்பட்டன. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1961ம் ஆண்டு ஏப்ரல் 5ல் இந்த அணைக்கான அடிக்கல்லை நாட்டினார் என்றால், எவ்வளவு தாமதமாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது என எண்ணிக்கொள்ளுங்கள். 1996ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் நிறுத்தப்பட்ட இந்த அணையின் கட்டுமானப்பணிகள், மீண்டும் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்டன.
இந்த அணையின் திறப்புவிழாவில் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த வருட இறுதிக்குள் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளநிலையில், இது ஒருவாரத்திற்குள் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக குஜராத் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் முதல்வர் விஜய் ரூவானி ‘குஜராத்தின் லைஃப்லைன்’ என அழைக்கும் இந்த அணையின் கொள்ளளவு 4.73 மில்லியன் ஏக்கர் தண்ணீர் மற்றும் 138.68 அடி உயரமும் கொண்டது.
- ச.ப.மதிவாணன்