சேலம் மாவட்டம் சின்னதாண்டவனூர் பகுதியைச் சேர்ந்த தனுஷ் கண்டன், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் தர்மபுரி மாவட்டம் சின்னம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரோஷினி என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பழக்கம் நாளடைவில் இருவருக்குள்ளும் காதலாகவும் மாறியுள்ளது.
இந்த விவகாரம் இருவரின் வீட்டிற்குத் தெரியவர ரோஷினியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனுஷ் கண்டன் - ரோஷினி இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் காதல் ஜோடி இருவரும் பாதுகாப்பு கேட்டு எடப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து விசாரித்த போலீசார், பெண் மெஜர் என்பதால், தனுஷ் கண்டனுடன் ரோஷினியை அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும், சின்னதாண்டவனூர் பகுதியில் உள்ள தனுஷ் கண்டன் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று(23.1.2024) சின்னதாண்டவனூரில் உள்ள தனுஷ் கண்டன் வீட்டிற்குப் பட்டாக் கத்தியுடன் காரில் வந்து இறங்கிய கும்பல் ஒன்று வீட்டிற்குள் புகுந்து ரோஷினியை இழுத்துச் சென்றது. மேலும் தடுக்க வந்தவர்களை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, சிறிது நேரத்திற்குள் ரோஷினியை காரில் அந்த கும்பல் கடத்திச் சென்றது. இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வந்தது.
இதுகுறித்து தனுஷ் கண்டன் எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசார்ணை நடத்தி பெண்ணை மீட்டனர். மேலும், சம்பவத்திற்கு காரணமான ரோஷினியின் தந்தை, தாய், சகோதரர், சகோதரி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.