கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய கமாண்டர்களுள் ஒருவரான யூசுப் அசார் கொல்லப்பட்டார்.
இந்திய வான்படையின் இந்த தாக்குதலுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "நமது நாட்டின் அமைதியும், சகிப்பு தன்மையும் பலவீனம் என அர்த்தம் ஆகாது ஜெய்ஹிந்த் " என பதிவிட்டு இந்திய வான்படைக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.