முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில் சிறை தண்டனை முடிவதற்குள்ளாகவே நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் புதிய தகவல் கிடைத்துள்ளதாக பேரறிவாளன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் உரிய ஆவணமின்றி ஆயுதங்கள் வைத்திருந்ததாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் அவரது தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
அதன்பிறகும் அவர் தண்டனை காலம் முடியும் முன்னரே விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் அப்படி விடுவிக்கப்பட்டதுக்காக மத்திய அரசிடம் மகாராஷ்டிர அரசு எந்த அனுமதியும் கேட்கவில்லை என தற்போது தெரிய வந்துள்ளது. மேலும் சஞ்சய் தத்தை விடுவிக்கும் முடிவை மாநில அரசே எடுத்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அளிக்கப்பட்ட மனுவிற்கு கொடுக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சஞ்சய் தத் விவகாரத்தில் மாநில அரசு கொடுத்த நீதி ஏன் இந்த வழக்கில் கிடைக்கவில்லை என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.