சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பேசியதாவது, “நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப்பிறவி அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என்று தெரிவித்தார். அவரது பேச்சு, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து பிரதமர் மோடியை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்பட அனைத்து எதிர்க்கட்சியினரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் அந்த கருத்தை, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா பகுதியில் கிராம அளவிலான தன்னார்வலர் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “முன்னேற்றத்திற்கு எப்போதாவது ஒரு முடிவு உண்டா? நாம் நமது இலக்கை அடையும்போது, இன்னும் செல்ல வேண்டியவை அதிகம் இருப்பதைக் காண்கிறோம். ஒரு மனிதன் சூப்பர்மேன் ஆக விரும்புகிறார். திரைப்படங்களில் அவர்கள் அசாதாரண சக்திகளைக் கொண்ட சூப்பர்மேனைக் காட்டுகிறார்கள். எனவே ஒரு மனிதன் அத்தகைய சக்தியைப் பெற விரும்புகிறான்.
ஆனால், அவன் அதோடு மட்டும் நிற்கவில்லை. அதன்பிறகு தேவனாக விரும்புகிறான். ஆனால் தேவதாஸ் நம்மை விட கடவுள் பெரியவர் என்று கூறுகிறார்கள். எனவே மனிதர்கள் கடவுளாக மாற விரும்புவதாக கூறுகிறார்கள். ஆனால், பகவான் தன்னை ஒரு விஸ்வரூபம் என்கிறார். அதைவிடப் பெரியது எதுவும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
வளர்ச்சிக்கு முடிவே இல்லை. எப்பொழுதும் அதிகமானவற்றிற்கு வாய்ப்பு இருப்பதாக ஒருவர் நினைக்க வேண்டும். தொழிலாளர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் அதிகமாக பாடுபட வேண்டும். நிறைய வேலைகள் செய்ய வேண்டும். பல குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுத்தாலும், கல்வி தேவைப்படும் என்ற புதிய தலைமுறை உருவாகி வருகிறது. வளர்ச்சி என்பது ஒரு தொடர் பணி. ஒரு தொழிலாளிக்கு நாம் இவ்வளவு செய்தோம், ஆனால் இன்னும் நிறைய இருக்கிறது என்ற உணர்வு இருக்க வேண்டும்.