ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தல் பரப்புரையில், அதிக பெரும்பான்மையாக 400 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என பா.ஜ.க தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பெரும் ஏமாற்றத்தைப் பெற்றுத் தந்தது.
543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்.
பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை பா.ஜ.க பெறாதது குறித்து பல்வேறு விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பா.ஜ.கவுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நேற்று (13-06-24) ஆர்.எஸ்.எஸ் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார், பா.ஜ.கவுக்கு மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
அதில் பேசிய இந்திரேஷ் குமார், “ராம ராஜ்ஜியத்தில் இருக்கும் ஜனநாயகத்தைப் பாருங்கள். ராமர் மீது பக்தி கொண்டவர்கள் கர்வம் கொண்டு ஆணவமடைந்தனர். இருப்பினும், அந்தக் கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கப்பட்டது. அவர்களின் ஆணவம் காரணமாக அந்த கட்சிக்கு 241 இடங்கள் கொடுத்து அவர்களின் ஆணவத்தை ராமர் தடுத்து நிறுத்தியிருக்கிறார். ராமர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் 234 இடங்கள் கொடுத்து தடுத்து நிறுத்தியிருக்கிறார். ராமனிடம் பிரார்த்தனை செய்பவர்கள் பணிவாக இருக்க வேண்டும். ராமர் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை, தண்டிப்பதில்லை. ராமர் அனைவருக்கும் நீதி வழங்குகிறார். அவர் அனைவருக்கும் கொடுக்கிறார், தொடர்ந்து கொடுக்கிறார். ராமர் எப்போதும் நீதியாக இருந்தார், அப்படியே இருப்பார்” என்று கூறினார்.