வியன்னாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஆஸ்திரிய நாட்டுத் தூதரகம் நவம்பர் 11 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வியன்னாவின் ஆறு இடங்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதில் பயங்கரவாதி ஒருவரும் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிலர் தப்பி ஓடிவிட்டதாகவும், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரியாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருந்த நிலையில், ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஆஸ்திரிய நாட்டுத் தூதரகம் நவம்பர் 11 வரை பொதுமக்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.