கேரள மாநிலம் வயநாட்டில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியானதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கான நிவாரண நிதியாக 2 கோடி ரூபாயை பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் வழங்கியது. மேலும் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் கடன் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகியவை வயநாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
வயநாடு நிலச்சரிவு நிவாரணத்திற்காக கேரள மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஆன்லைன் மூலம் 2 கோடி ரூபாயை பஜாஜ் நிறுவனம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணரும் கார்ப்பரேட் விவகாரங்கள் பிரிவு தலைவருமான என் சீனிவாச ராவ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சட்டம் மற்றும் இணக்கப் பிரிவு மூத்த தலைவர் அனில் ஆகியோர் சந்தித்தனர்.
இதுகுறித்து பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை பொருளாதார நிபுணர் என். சீனிவாச ராவ் கூறுகையில், 'எங்களின் அனைத்து சமூக நலத் திட்டங்களும் சமூகத்தின் மிக முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது. வயநாடு நிலச்சரிவு அங்குள்ள மனித உயிர்களை பலி கொண்டதோடு வீடுகள் மற்றும் உடமைகளை அடித்துச் சென்று அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. அவர்களுக்கு எங்களால் ஆன உதவியை செய்யும் வகையில் நாங்கள் இந்த நிவாரணத் தொகையை வழங்கி உள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த சிறு உதவியை நாங்கள் செய்துள்ளோம்' என்று தெரிவித்தார்.
வயநாட்டில் இயல்பு நிலை திரும்ப மாநிலத்தின் கூட்டு முயற்சிக்கு உதவிடும் வகையில் இந்த நிதி உதவியை வழங்கி உள்ளோம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகியவை வயநாட்டில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து உரிமைகோரல்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதேபோல் பஜாஜ் பின்சர்வ் குழுமத்தின் கடன் வழங்கும் பிரிவான பஜாஜ் பைனான்ஸ், நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில், வயநாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் தொகையை திரும்ப பெற இடைக்கால தடையை அறிவித்துள்ளது. வயநாட்டில் உள்ள புஞ்சிரிமட்டம், முண்டக்கல், சூரல்மாலா, அட்டமலா, மேப்பாடி மற்றும் குன்ஹோம் கிராமங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய தடைக்காலம் பொருந்தும் என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது.